Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil)

Tripoto
26th Jul 2019
Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) by Sivalingam P

கடல் போல் நீர், இருபுறமும் பருவமழை நனைத்த காடுகள், அதில் சில ஓங்கி உயர்ந்த மரங்கள், அதற்குச் சவாலாய் நிற்கும் நீல வானம், நீரையும் காட்டையும் பிரிக்கும் செம்மண் சரிவுகள், அதில் சில புற்கள், அதை மேயும் காட்டெருமை, ஆங்காங்கே தீவுக்காடுகள், மழை தர யோசிக்கும் மேகங்கள், மெல்லிய அலைகள், சில்லென்ற சாரல் !

இத்தனை அழகோடு, ஏழு பேரை சுமந்து கொண்டு, நீரைக் கிழித்து மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது அந்த மோட்டார் படகு ..!

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 1/18 by Sivalingam P

இத்தனையும் உள்ளடக்கிய ஒரு காட்சி உண்டோ ! இல்லை கற்பனையா ? எனத்தோன்றுகிறதா ? ஆம் அத்தனையும் உண்மைக் காட்சிகள்தான் !

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 2/18 by Sivalingam P

மேற்கூறிய காட்சிகள் தென்மலை அணையில் நான் கண்டதுவே !

எனது இவ்வருட பருவமழை காலத்தின் சுற்றுலா இடம் "தென்மலை."

எங்கயோ கேள்விப்பட்டிருக்கமே, எங்கு உள்ளது இந்தத் தென்மலை?

" என்று யோசிக்கும் முன், நானே சொல்லிவிடுகிறேன் இதன் சிறப்பையும் எனது பயண அனுபவத்தையும்.

வாருங்கள் தென்மலை என்ற தேன்மலைக்கு..!

இவ்வாண்டு பருவமழை தொடங்கி இரு மாதங்கள் ஆன பின்பும் சுற்றுலா திட்டமேதுமின்றி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. விடுமுறை கிடைக்கும் போது, தென்மலை செல்லலாம் என மனதின் ஓரமாக ஒரு சிறிய திட்டம் இருந்தது. ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் திடீரென யோசனை தோன்ற, ரயிலில் முன்பதிவு முடிந்திருந்தது. தட்கலில் முந்திய நாள் அதிர்ஷ்டவசமாகக் கிடைக்க, தென்மலையிலும் காட்டிற்குள் தங்கும் விடுதியை முன்பதிவு செய்தேன்.

பயண நாள் வர, மாலை 5.30 மணிக்கு, சென்னையிலிருந்து பயணம் ஆரம்பித்தது. திருச்சி, மதுரை, தென்காசி, செங்கோட்டை வழியே கொல்லம் செல்லும் இந்த ரயிலில், தென்மலை மறுநாள் காலை 6 மணிக்குச் சென்றடையும்.

எங்களது பயணத்தில் மறு நாள் காலை செங்கோட்டை அடையவே காலை 6 மணியானது. ரயிலே காலியாக மாறியது செங்கோட்டையிலிருந்து புறப்படும்போது ..! சில நிமிடங்களில் காலைச் சூரியன் கண்விழிக்க, மலையில் மெதுவாக ஏறிச் சென்றது. புதிதாய் போடப்பட்ட அகல ரயில் பாதையில், இருபுறமும் நன்கு பராமரிக்கப்பட்டு, மண்சரிவுகள் ஏற்படாவண்ணம் கம்பிவலை போர்த்தியிருந்தது பாறைகளும் மண் மேடுகளும்.!

இங்கிருந்து செல்லும்போது இடதுபுறமாக அமர்ந்து சென்றால், மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை பள்ளத்தாக்கு, அணைகள், சாலை என ரசித்துக்கொண்டே செல்லலாம்.

காலை 7 மணியளவில் தென்மலை அடைந்ததும், இறங்கி வெளியே வந்தோம். சிறிய ரயில் நிலையமாயிருந்தாலும் இங்கு பயணச்சீட்டு முன்பதிவு, தட்கல் வசதி அமையப்பெற்று சிறப்பாக உள்ளது. பிறகு அங்கு தயாராய் இருந்த ஆட்டோவில் ஏறி சுற்றுலா அலுவலகத்தை 10 நிமிடங்களில் அடைந்தோம். இருவருக்குக் கட்டணமாக 30 ரூபாய் கொடுத்தோம்.

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 3/18 by Sivalingam P

வரவேற்பறை அதிகாரியிடம் எங்கள் முன்பதிவு குறித்த தகவலைத் தெரிவிக்க, காலை ஒன்பது மணிக்கு மேல் மட்டுமே தங்கும் விடுதிகள் கொடுக்கப்படும் என்றனர். தற்காலிகமாக காலைக்கடன், பல்துலக்க அருகிலிருந்த வசதியை உபயோகித்துக் கொள்ளுமாறு கூறினார். நாங்களும் அதுவரை காத்திருந்து என்ன செய்வது என அங்கேயே தயாராகி அருகிலிருக்கும் 13 கண் பாலத்தை பார்வையிடச்சென்றோம்.

இங்கிருந்து 5கிலோமீட்டர் தொலைவில் நாங்கள் ரயிலில் வந்த பாதையில் உள்ளது. அருகிலிருக்கும் உணவகத்தில் காலை உணவாக தோசை, ஆம்லெட் சாப்பிட்டுவிட்டு ஆட்டோவில் ஏறி, பாலத்தை அடைந்தோம்.

இங்கிருந்து செங்கோட்டை செல்லும் பேருந்தும் அவ்வழியே செல்லுகிறது. பாலத்தை அடைந்து அருகிலிருந்த படிக்கட்டில் மேலே ஏறி தண்டவாளத்திலிருந்து பார்க்கும் போது ஒரு புறம் குகை, மறுபுறம் வில் போல் வளைந்து செல்லும் பாதையை 13 தூண்கள் சுமந்து கொண்டிருந்தன. தூண்கள் அனைத்தும் ஏறக்குறைய 20 அடி உயரத்தில் நூற்றாண்டைக் கடந்தும் கம்பீரமாய்க் காட்சியளிக்கிறது.

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 4/18 by Sivalingam P

2018 ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றும் போது இப்பாலமும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இதன் பழைய புகைப்படங்களை பார்க்கும் போது ஆங்கிலேயர் காலத்தின் கட்டிட அழகு மனதைக் கவருகிறது. தற்போது, புதுப்பிக்கப்பட்டபிறகு தூண்களை சுற்றிலும் சிமெண்ட் பூசியிருப்பதால் அதன் உண்மையான அழகில் சற்று தொய்வு காணப்படுகிறது.

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 5/18 by Sivalingam P

பருவமழையின் தாக்கத்தில் மலை முழுவதும் பசுமையாய்க் காட்சியளித்தது. குடைந்த குகைக்கருகில் சொட்டு சொட்டாய் விழும் ஊற்று நீர் , வலப்புறம் பாலத்தை கண்டு வளைந்து செல்லும் ஆறு, இதனிடையில் கொல்லம் செல்லும் சாலை, இடப்புறம் ஓங்கி உயர்த்த மரங்கள் என நமது கண்களை கவருகிறது. ரயில் வரும்போது மேலே ஏறிக்கொள்ள அகலமான நடைபாதை போடப்பட்டிருக்கிறது. சுற்றுலாப்பயணிகளை கவருவதற்கே இவ்வாறான ஏற்பாடுகள் !

பாலத்தின் ஒருபுறம் ஏறி நடந்து சென்று மறுபுறம் இறங்க படிக்கட்டு இல்லை. சிறிய பாதை மட்டுமே உள்ளது. இவ்வாறாக 30 நிமிடம் சென்றதே தெரியவில்லை. சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மீண்டும் வன அலுவலகத்தை அடைந்தோம்.

உங்களுக்கு முன்பதிவு செய்த அறையைத் தர 11 மணி ஆகும் என்றனர். இன்னும் 2 மணி நேரமா என சலிப்பாகியது. விதிமுறைப்படி காலை 11 மணிக்கு முதல் அடுத்தநாள் காலை 11 மணி வரை மட்டுமே ஒரு நாள் கணக்காக இருந்தது.

அதுமட்டுமில்லாமல் 11 மணிக்கே இதர சுற்றி பார்க்கும் இடங்களையும் நேர அட்டவணையிட்டு தந்தனர். இது முற்றிலும் முரண்பாடாய் இருந்தது. சென்னையிலிருந்து வருவதால், முதலில் நங்கள் குளித்து கிளம்ப வேண்டும் என்று மீண்டும் முறையிட, சில நிமிடங்களில் தற்காலிக அறையைத் தந்தனர். இந்த கட்டிடம் முழுவதும் நான்கைந்து அறைகளாக இருந்தது.

ஒவ்வொரு அறையிலும் 6~8 பேர் வரை தங்கக்கூடிய அடுக்குக்கட்டில் போல் அமைத்திருந்தனர். இதில் தங்க ஒருவருக்கு ரூபாய் 195 மட்டுமே. இங்கு யாரும் இல்லாததால், எங்களுக்குத் தந்தனர். பிறகு குளித்து கிளம்ப மணி பதினொன்றானது. சென்னை திரும்ப தட்கலில் முன்பதிவு செய்ய முயற்சியில் இருமுறை தோல்வி ! மூன்றாம் முறை முயற்சியில் டிக்கெட் கிடைத்தது ஆனால் காத்திருப்பு வரிசையில் 30 ஆக ! கண்டிப்பாக இது கிடைக்காது என நினைத்துக்கொண்டேன்.

நாளைக்கு முன்பதிவில்லதா பெட்டியில் தான் சென்னைக்குப் பயணம் என நினைத்துக்கொண்டு சுற்றிப்பார்க்க புறப்பட்டோம்.

பின்னர் 500 மீட்டர் தொலைவில், சாகச மண்டலத்தை சுற்றிப்பார்க்க புறப்பட்டோம்.

இதனை ஒட்டியே எங்கள் தங்குமிடம் இருப்பதாகக் கூறினர்.

பிறகு அவ்விடம் செல்ல, முதலில் சுற்றிப்பாருங்கள், பிறகு அறைக்கு செல்லலாம், இப்போது அங்கு சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றனர். நாங்களும் உடமைகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு சுற்றிப்பார்க்கச்சென்றோம்.

சாகச மண்டலம் (Adventure Zone)

முதலில் படிக்கட்டுகளான இரும்புப் பாதை.

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 6/18 by Sivalingam P

அடர் காட்டிற்குள் செல்வது போல் ஒரு உணர்வு !

நல்ல பராமரிப்பு ! உயரமாகவும் தாழ்வாகமும் ஒரு 300 மீட்டர் நீளத்திற்கு ரம்யமாய் இருந்தது.

அவ்வாறே மேல செல்ல, பழைய செங்கோட்டை சாலை மரங்கள் மூடிய நிலையிலிருந்தது. அணை கட்டுவதற்கு முன்னர் இச்சாலை பயன்பாட்டிலிருந்திருக்கிறது. தற்போதைய பாதையானது அணையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

பிறகு மெதுவாய் நடந்து கீழே செல்ல சிறிய குளத்தில் வண்ண மீன்கள், கால்மிதி படகு, மிதிவண்டி, துப்பாக்கி சுடுதல், மலையேற்றம், கயிறில் நடத்தல் என எண்ணற்ற விளையாட்டுகள் இருந்தது.

சில விளையாட்டுகள் பராமரிப்பின்றி கிடந்தது. இவ்வாறே ஏறக்குறைய 2 மணி நேரம் சென்றது. இதனை முடித்துக்கொண்டு இரும்புக்கயிற்றில் மேலிருந்து சறுக்கிக் கொண்டு வருவது நல்ல அனுபவத்தை தந்தது.

மணி 12.30 ஐ கடந்தது. மீண்டும் எங்களை அதே காட்டில் கொஞ்சம் மேலே கூட்டிச்சென்றனர் . அறையை காண்பித்து 2 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு படகு சவாரிக்கு தயாராய் இருங்கள் என கூறிவிட்டுச்சென்றனர்.

சிறிய அறை (10x 8 அடி ),கீழிருந்து 20 அடி உயரத்தில் மரத்தோடு சேர்த்து நான்கு இரும்பு தூண்கள் தாங்கிக்கொண்டிருந்தது. மேலே செல்ல இரும்பு படிக்கட்டுகள், உள்ளே ஒருபுறம் கண்ணாடி கதவுகள், சிறிய கழிவறை, மின்வசதி, மின்விசிறி, இரு ஜன்னல் என அனைத்து வசதிகளும் நிறையப்பெற்ற அறை !

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 7/18 by Sivalingam P

பிறகு மதியம் ஆக பசியெடுத்தது. சுற்றிப்பார்க்கும் இடங்கள் அனைத்தும் 3 கிலோமீட்டர் சுற்றளவில் இருப்பதால் சிறிய பேருந்தில் அழைத்துச்செல்கின்றனர். சொந்த வாகனம் இருந்தாலும் நன்றுதான் .

பிறகு அருகிலிருக்கும் உணவகத்தில் மதிய உணவு உண்டு அணைக்கு செல்லத் தயாராய் இருந்த பேருந்தில் ஏறினோம்.

மதிய உணவு சுமார் தான் !

மோட்டார் படகு சவாரி (Boating)

15 நிமிடத்தில் அணையை அடைந்து, மீண்டும் 1 கிலோமீட்டர் நடந்து சென்று மோட்டார் படகு இருக்குமிடத்தை அடைந்தோம். செல்லும் வழியில் பரிசில் படகும் இருந்தது. இதற்கு தனியாக 100 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் அங்கு 30 பேர் செல்லக்கூடிய பெரிய படகு இரண்டும், 10 பேர் செல்லக்கூடிய சிறிய படகு ஒன்றும் இருந்தது. ஓட்டுநர் இருவரோடு சேர்த்து 7 பேர் என்பதால் சிறிய படகில் சென்றோம். பிறகு நாங்கள் கண்ட காட்சிகள் தான் இக்கதையின் ஆரம்பத்தில் கூறியது !

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 8/18 by Sivalingam P

அணையில் ஆங்காங்கே தீவுகளில் இடிந்த கட்டடங்களும் இருந்தன. இதுமட்டுமில்லாமல் அணையின் அடியிலும் இதுபோன்ற கட்டிடங்களை நீர் வற்றும் போது பார்க்க முடியும் என படகு ஓட்டுநர் கூறினார்.

இவ்வணை ஏறக்குறைய 17 கிலோமீட்டர் நீளமும் அதிகபட்சமாக 2 கிலோமீட்டர் அகமும் உடையது.

தூரத்தில் ஒரு மோட்டார் படகு மெதுவாய் எங்களை கடந்து தொலைவில் சென்று கொண்டிருந்தது. அவர்கள் எங்கே செல்கிறார்கள் எனக் கேட்க, இங்கிருந்து 10 கிலோமிட்டர் தொலைவில் அணைக்கருகில் தங்கும் விடுதி இருக்கிறது. அங்கு குழுவாகச் சென்று தங்கி சமைத்து சாப்பிட்டு மறுநாள் வருவார்கள் எனக் கூறினார். மேலும் இதற்காக ரூபாய் 13500 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது (6 பேருக்கு). இத்தங்கும்விடுதியானது “இடிமுழங்கான் இரவு” (பெயருக்கேற்றவாறு அதன் அனுபவமும் இருக்கும் என்பதில் ஐயமில்லை) எனும் பெயரில் செந்துர்னி வனசரகத்தில் அமைந்துள்ளது.

மேலும் அணையின் மையத்தில் உள்ள தீவுகளில் இதுபோன்ற தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.

வனவிலங்குகளில் காட்டு மாடு மட்டுமே தூரத்தில் தனியாக மேய்ந்து கொண்டிருந்தது. யானைகள் பெரும்பாலும் மாலை நேரம் தண்ணீர் குடிக்க அணைக்கு வரும் என ஓட்டுனர் தெரிவித்தார். ஏறக்குறைய 1 மணி நேரத்திற்கு பிறகு படகு சவாரி முடிந்து கரையை அடைந்தோம்.

பிறகு எங்களுடன் வந்திருந்த குடும்பத்தினர் பரிசில் செல்ல ஏறிக்கொண்டிருந்தனர். இதற்கு அவர்கள் ஏற்கனவே கட்டணம் செலுத்தியிருந்தனர். பிறகு நாங்கள் அணையை விட்டு வெளியே செல்லும் போது பரிசில் ஓட்டுபவர் , நீங்களும் வாருங்கள் என்றனர். நாங்களோ, இதற்கு கட்டணம் செலுத்தவில்லை வேண்டாம் எனக் கூறினோம். இருப்பினும் பரவாயில்லை, யாரேனும் கேட்டால் வாங்கிவிட்டோம் என கூறுங்கள் என்றனர். சரி என்று நாங்களும் ஏறி அமர, வட்டமடித்துக்கொண்டே அணையில் மீண்டுமொரு பயணம் செய்தோம்.

பரிசில் பயணத்தில் குளிர்ந்த நீரைத் தொட்டு அலம்பிக்கொண்டு வட்டமடித்துக்கொண்டிருந்தோம். ஓரிடத்தில் நின்று, பரிசிலை கடிகார திசையில் வேகமாக சுழற்ற, எதோ அணையும் காடும் சுழல்வதுபோல் தலைக்கேறியது கிறுகிறுப்பு .!

எங்கே விழுந்து விடுவோமோ என பயந்து நீரில் கை வைத்து வேகத்தைகுறைத்தோம். கிறுகிறுப்பு சமமாக கடிகார எதிர் திசையில் மீண்டும் பரிசிலை சுற்ற மிக ஆனந்தமாய் இருந்தது..!

ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு பிறகு கரையை அடைந்து, சாலைக்குச் சென்றோம். அங்கே காத்திருந்த வாகன ஓட்டுநர் , 1 மணி நேரம்மட்டுமே காத்திருக்க முடியும், கூடுதலாக சென்ற பரிசல் நேரம் காத்திருக்க முடியாது, இவ்வாறு செய்தால் அடுத்த இடத்திற்கு செல்ல முடியாது என கோபமாக கூற , நாங்களும் அப்பறம் ஏன் மோட்டார் படகு செல்வோருக்கு பரிசில் சவாரிக்கும் அனுமதிக்கின்றீர்கள் என சண்டையிட தூரத்தில் சப்தத்தோடு, நீங்க 2 பேரும் டிக்கெட் வாங்கல, ஆனால் பரிசல் போயிருக்கிங்க, காசு கொடுங்க, எனக்கேட்க தர்மசங்கடமாய் போனது ..! கொடுத்து விட்டு நகர்ந்தோம்.

பிறகுதான் தெரிந்தது பரிசில் காரரின் தந்திரமும் கலந்த ஏமாற்று வேலை என ..! ஏனென்றால் பாரிசில்காரரோ யாரேனும் கேட்டால் டிக்கெட் வாங்கியாச்சுனு சொல்லிடுங்கனு " சொன்னார், ஆனால் இங்கோ நுழைவுசீட்டு கொடுக்கும் நபர் எங்களை காசு கேட்கிறார். இங்கிருந்து பரிசில் செல்லும் நபர்களை பார்க்கமுடியாது.

ஆகையால் இந்த பயணத்தில் இந்த ஏமாற்றம், வித்தியாசமாகத்தான் இருந்தது. எது எப்படியாயினும் நங்கள் பரிசிலில் ஏறாமலிருந்திருக்க வேண்டும்.

நமது ஆசையே ஏமாற்றத்தின் மூலதனம் என்பதை இதன் மூலம் தெளிவாயப் புரிந்து கொள்ள முடிந்தது .

மான்களின் மறுவாழ்வு மையம் (Deer Rehabilitation Center)

பிறகு புள்ளிமான்களின் மறுவாழ்வு மையம் என்ற பூங்கா சென்றோம். அங்கு சில தூரம் நடந்து சென்று, அங்கே நாம் கொடுக்கும் புற்களை உண்டு குறிப்பிட்ட இடத்திற்குள் வாழும் புள்ளி மான்களைக் கண்டோம். பெரிதாய்க் கூறிக்கொள்ளும் அளவுக்கு இப்பூங்கா இல்லை. ஆதலால் சில நிமிடங்களில் வெளியேறினோம். மீண்டும் வன அலுவலகத்தை அடைந்தோம் மாலை 5.30 மணி அளவில்.

நீரூற்று நடனம் (Musical Fountain)

இரவு 7.30 மணியளவில் இங்கு வண்ணமயமான நீரூற்று நடனம் மற்றும் ஒலியும் ஓளியும் நிகழ்ச்சி இருந்ததால் அதற்காகக் காத்திருந்தோம். மாலைமங்கும் நேரமென்பதால் கொசுவின் தாக்கம் அதிகமாயிருந்தது. பிறகு தேநீர் அருந்திவிட்டு அருகிலிருந்த குழைந்தைகளுக்கான பூங்காவில் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். அப்போது மயில் போல் எதோ ஒரு பறவை கத்திக்கொண்டிருந்தது. அனைவரும் மரத்தின் மேலே பார்த்து கூச்சலிட்டுக்கொண்டிருக்க என்ன என்று பார்த்தால், மலபார் இருவாட்சி பறவை ஒன்று உட்கார்ந்திருந்தது.

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 9/18 by Sivalingam P

விரைவாய் கேமராவை எடுத்து நாலைந்து புகைப்படம் எடுக்க பிறகு பறந்து சென்றது விர்ரென ..!

பிறகு 7 மணியளவில், 200 மீட்டர் தொலைவில் வண்ண நீரூற்று நடனம் காண நடந்து சென்றோம். காட்டிற்குள் ஒரு சிறிய கிரிக்கெட் மைதானம் அளவில் ஒருபுறம் நீரூற்று, மறுபுறம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க படிக்கட்டுக்கட்டு அமைப்பில் வில்போல் வளைந்த கூடாரமும் இருந்தது. சரியாக 7.30 மணிக்கு இருள் சூழ வண்ணமயான விளக்குகளில் நீரூற்று நடனம் ஜொலித்தது. கிட்டதட்ட 7 பாடல்களுக்கு (மலையாளம், தமிழ் பாடல்கள்) ஏற்ப நீரின் நடனமும் கலவையும் மாறுபட்டது.

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 10/18 by Sivalingam P
Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 11/18 by Sivalingam P
Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 12/18 by Sivalingam P

காட்டிற்குள் திருவிழாபோல் 40 நிமிடங்கள் கரைந்து சென்றது. முடித்து செல்லும் போது சிலர், இவ்வளவுதானா , இதற்கு இவ்வளவு கட்டணமா ? என பேசிச்சென்றனர்.

மேலும் ஊட்டி மற்றும் மைசூர் இடங்களில் இதுபோன்ற நீரூற்று நடனங்களை பார்த்தோருக்கு இது அவ்வளவு பிரமாண்டமாக தெரிவதில்லை. இருப்பினும் தென்மலைக்கேற்ப சிறப்பான அமைப்பு என்றுதான் கூற வேண்டும்.

ஒலியும் ஓளியும் (Light & Sound Show)

பிறகு நடந்து சென்று 8 மணியளவில் தென்மலை பற்றிய குறும்படம் ஒளி மற்றும் ஒலி அமைப்போடு கட்டினர். இதற்காக ஒரு பெரிய புல்வெளியில் , படிக்கட்டு அமைப்பில் திறந்த வெளி அரங்கமம் , குறும்படத்தில் அவ்வப்போது வரும் கதாபாத்திரத்திற்கேற்ப அதன் சிலையும் அரங்கத்தின் இருபுறமும் வைத்து அதற்கேற்ப வண்ண விளக்குகளால் ஜொலிக்கவிட்டனர். ஏறக்குறைய அரைமணிநேரம் மலையாளத்தில் தென்மலை வரலாற்றை கூறியிருந்ததால், முழுவதுமாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 13/18 by Sivalingam P

தென்மலை பெயர்காரணத்தை தேனீக்கள் கூறியது மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது. தென்மலை என்றால் மலையாளத்தில் தேன்மலை என்று பொருள். இங்கு எடுக்கப்படுகின்ற தேனானது அதிக சுவை மற்றும் மருத்துவக்குணமுடையது. காரணம் என்னவென்றால் தென்மலைக் காடுகளில் உள்ள தனித்துவமான பூக்களிலிருந்து தேனீக்கள் அதனைச் சேகரிக்கின்றன.

பிறகு நிகழ்ச்சி முடிய, தூக்கம் கண்ணைக்கட்டியது. அருகிலிருந்த உணவகத்தில் இரவு உணவாக தோசை, பரோட்டா சாப்பிட்டுவிட்டு அறைக்குச் செல்லத்தயரானோம். வனக்காவலரும் எங்களை அழைத்து சென்றார். அதற்கு முன்னர் நாள் முழுவதும் எங்கள் கூடவே சுற்றுலா வந்த குடும்பத்தினரிடையே அவ்வப்போது பேசிக்கொண்டாலும், தற்போது கூடுதல் விவரங்களோடு அறிமுகப்படுத்துக்கொண்டு, இன்றைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டோம்.

இருள் சூழ்ந்த பாதையில் கைவிளக்கோடு, தங்கும் அறையை பதினைந்து நிமிடத்தில் அடைந்தோம். பிறகு வனக்காவலர் விடைபெற, அறைக்குள் சென்றோம். மதியம் வைத்திருந்த சோப்புகளை எலி பாதியாக உண்டுவிட்டு, நாங்கள் குளிக்க மீதம் வைத்திருந்தது. அய்யயோ, இரவு இதன் தொல்லை உள்ளதோ என பயந்து கொண்டு, களைப்பிற்கு ஈடுகட்ட தூக்கத்தை வரவைத்துக்கொண்டிருந்தோம்.

தூறலிடும் பருவமழை, வனத்தை தாலாட்டும் காற்று, இரவின் ரீங்காரம், அருவியின் ஆர்ப்பரிப்பு, ஓடும் நீரின் சலசலப்பு, மரங்களின் அசைவு, ஆந்தையின் அலறல் என எதுவுமின்றி நிசப்தமாய் இருந்தது. வராமல் வந்துகொண்டிருந்த தூக்கத்தைத் தேடி, கண்ணாடி வழியே காட்டின் அடர் இரவை ரசித்துக்கொண்டிருந்தேன். நேற்றிரவு தூக்கம் ரயில் ஓசையோடு ! இன்றிரவு நிசப்தமான காட்டிற்குள்..! யோசித்துக்கொண்டே நித்திரையில் ஆழ்ந்தேன்.

அதிகாலை ஆறு மணிக்கு மேல் முழிப்பு வந்தது. பிறகு கண்ணாடி வழியே மரங்களை எட்டிப்பார்க்கும்போது, நீர்துளிகளின்றி காலை வெளிச்சத்தில் ஆனந்தமாய் அசைந்துகொண்டிருந்தன. கடந்த இரு நாட்களாக மழையின்றி காணப்பட்டதால் சிறிது புழுக்கமாகவே இருந்தது. இருப்பினும் மின்விசிறி இருந்ததால் சமாளிக்க முடிந்தது.

இன்று காலை எழுந்து பாலருவி (தென்மலை -செங்கோட்டை வழியில்) சென்று வரலாம் என முந்தய நாள் இரவு யோசனை இருந்தது. இருப்பினும் அருவி பிரதான சாலையிலிருந்து 3 கிலோமீட்டர் காட்டிற்குள் இருப்பதால், அங்கு சென்று மதிய ரயிலை பிடிக்க தாமதமாகலாம்.

மேலும் முன்பதிவு செய்யாமலிருப்பதால், செங்கோட்டை சென்று ஏறினால் இடம் கிடைப்பது அரிதாகாலம் என்று அந்த யோசனையை விட்டுவிட்டு, இன்று மீதம் இருக்கும் ஒரு பூங்காவை பார்த்துவிட்டு மெதுவாய் ரயிலேறலாம் என என்னினேன்.

குளித்து கிளம்பி அறையைக் காலி செய்துவிட்டு எட்டு மணிக்கு சாப்பிடச்சென்றோம். சாப்பிட்டுவிட்டு மெதுவாய் ஓய்வுப்பூங்காவை அடைந்தோம்.

ஓய்வு மண்டலம் (Leisure Zone)

நேற்று வன அலுவலக்தில் காலை எங்களை வரவேற்ற அதிகாரியே இங்கும் உட்கார்ந்திருந்தார். நாங்களும் புன்முறுவலிட்டு அவரிடம் பேச, முன்பதிவுசீட்டை சரிபார்த்து நீங்கள் தான் இன்று முதல் பார்வையாளர் என வழிகாட்டினார்.

காலை வேலை நடைப்பயிற்சி உடலுக்கு ஆனந்தமாகத்தான் தெரிந்தது. நடைபாதைக்கு இருபுறமும் மூங்கில் அடர்ந்த மரங்கள், ஆங்காங்கே டைனோசர் சிலைகள் என போய்க்கொண்டே இருந்தது. எங்கடா முடியும் எனத் தேடிக்கொண்டே சென்றோம்.

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 14/18 by Sivalingam P

அத்தனை இடங்களிலும் ஒளி விளக்குகள் உடைந்தும் சரியான பராமரிப்பின்றியும் காணப்பட்டது. ஏறக்குறைய 2 கிலோமீட்டர் பயணத்திற்கு அப்பால் அணையின் மதகு தெரிந்தது. பிறகு கீழ்நோக்கி இறங்கி, கம்பியால் செய்யப்பட்ட தொங்கும் பாலத்தை அடைந்தோம்.

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 15/18 by Sivalingam P

தொங்கும் பாலத்திலிருந்து ஒருபுறம் அணையின் அழகும், மறுபுறம் சாலையும், கீழே அணையின் நீரும், நீரின் இருபுறம் அடைந்த மரங்களையும் கண்கொள்ளாக்காட்சியைத் தந்தது.

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 16/18 by Sivalingam P

பருவமழை காலத்தில் காட்டிற்குள் நடைப்பயிற்சி கூட்டிச் செல்வதில்லை. கண்டிப்பாக போகவேண்டும் என்று கூற, நீங்கள் செல்லும் எல்லா இடங்களும் நடைப்பயிற்சியே என்று எதார்த்தமாக பேசினர். நாங்களும் வேறு வழியின்றி சம்மதித்தோம்.

மணி 11 ஆன பிறகு பூங்கா நுழைவு வாயிலில் ஒரு எலுமிச்சை சோடா குடித்துவிட்டு ஓய்வடுத்தோம். பிறகு அருகிலிருக்கும் வன அலுவலகத்தை அடைந்து நேற்று முன்பணமாக வசூலிக்கபட்ட 500 ரூபாயை வாங்கிக்கொண்டு விடைபெற்றேன். தேன்மலைக்கு வந்து தேன் வாங்காமல் செல்வதா ? என நினைத்து அங்குள்ள அரசு அங்காடியில் காட்டுத்தேன் இருந்தது.

அலுவகத்தில் உள்ளே, தேனீக்களை பற்றிய தகவல்களை புகைப்படங்களாக வைத்திருந்தினர். அதில் தேனீக்களின் வகை, அமைப்பு, தேன் எடுக்கும் முறை, வளர்க்கும் முறை, கலப்படத்தை கண்டறியும் முறை என அனைத்தும் இடம்பெற்றிருந்தன.

250 மிலிட்டர் 150-க்கு வாங்கிக்கொண்டு தென்மலை ரயில் நிலையத்தை அடைந்தோம். மதியஉணவை முடித்துவிட்டு செல்லலாம் என்று நினைத்து, அங்குள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு, மீன் சாப்பிட்டு ரயில் நிலையத்தை அடைந்தோம்.

அங்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு நடைமேடையில் நின்றோம். நேரம் ஆக ஆக ஆட்களின் எண்ணிக்கை முப்பது நாற்பதைத் தாண்டியது. பேசிக்கொள்வதை பார்த்தால் அனைவரும் முன்பதிவு செய்யவில்லை என்று தெரிந்தது. இரயிலில் முன்பதிவற்ற பெட்டி முன்னே ஒன்றும், பின்னே ஒன்றும் இருப்பதாய் இணையத்தளத்தில் ரயில் எண்னை வைத்து தெரிந்து கொண்டேன்.

சில நிமிடம் கழித்து நாம் ஏன் முன் பெட்டியில் ஏறக்கூடாது ? என்ற யோசனை வந்தது. பத்து பெட்டி தூரத்தில் மெதுவாய் நகர்ந்து சென்றோம் முன்னோக்கி ! ஏனென்றல் அங்கு ஓரிருவர் மட்டுமே நின்றுகொண்டிருந்தனர்.

முன்னே சென்று நின்று கொண்டிருக்கும் வேளையில், அருகிலிருக்கும் மரங்களில் குரங்குகள் சண்டையிட்டு, கிளைக்குக் கிளை தாவிக்கொண்டிருந்தின. எனக்கும் அவற்றைப் பார்க்கும் போது, படமெடுக்க ஆவலாய் இருந்தது. கேமராவை எடுத்துக்கொண்டு சண்டை காட்சிகளை படமெடுக்கும் போது ஒரு குரங்கு அவ்வப்போது வாயை நன்றாய்த்திறந்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தது. அவ்வாறான செயலை புகைபடமெடுக்கவேண்டும் என நினைத்து அதையே கண்காணித்துக்கொண்டிருந்தேன். அது மெதுவாய் நடந்து ஒரு கிளையில் அமர்ந்தது.

தூக்க கலக்கமோ இல்லை உண்ட மயக்கமோ என்ன என்பது தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து கொட்டாவி விட்டுக்கொண்டிருக்க, அச்செயலை நானும் புகைப்படமாக மாற்றினேன். எனக்கும் சிரிப்புத் தாங்கவில்லை. ஏனென்றால் அதனால் இயல்பாய் இருக்கமுடியவில்லை. இருக்க முயற்சிக்கும் பொழுதே மறு கொட்டாவி வந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய 10 நிமிடம் இவ்வாறு போக, பிறகு அதுவும் எழுந்து சென்றது.

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 17/18 by Sivalingam P

நானும் ரயில் வர நேரம் நெருங்கியதால் அதற்காகத் தயாரானேன். சில நொடிகளில் ரயில் வர, பெட்டி ஏறக்குறைய காலியாகவே இருந்தது.

இடம் கிடைத்து விட்டது என சந்தோமாக அமர்ந்தேன். இருப்பினும் மலையின் அழகு என்னைக் கவர்ந்தது. ஆதலால் படியோரம் நின்று இயற்கையை ரசித்துக் கொண்டே வந்தேன். சில குகைகள் வர , காணொளி மற்றும் புகைப்படங்கள் எடுத்தேன். அப்போதுதான் ரயிலில் இருந்து 13 கண் பாலத்தை நான் எதிர்பார்த்தவாறு படம் எடுக்க முடிந்தது. பிறகு செங்கோட்டை வரும் வரை படிக்கட்டு அருகே நின்று பயணத்தை நிறைவு செய்தேன்.

தெளிவாய்க் கூறினால் இனிதான் பயணமே ஆரம்பம் !. சென்னை வரை ஏறக்குறைய இனி 11 மணிநேரம் செல்ல வேண்டும். அதுவும் முன்பதிவற்ற பெட்டியில் ! ஆங்காங்கே தாமதம் ஏற்பட்டாலும், காலை சரியாக 2.30 மணியளவில் தாம்பரம் வந்தது.

சுற்றுலா இனிதாய் முடிவுற்ற தருணத்தில் வீட்டை நோக்கி தூக்கக் கலக்கத்தில் சென்று கொண்டிருந்தேன்.

அனைத்து இடங்களிலும் இன்னும் நன்றாய் பராமரிப்பு, அரசின் சார்பாக நல்ல உணவு விடுதி, அணைக்குள் தங்கும் விடுதி என மேம்படுத்த வேண்டும் கேரள அரசின் சுற்றுலா மற்றும் வனத்துறை..!

மேலும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்காதவறு இருக்க பரிசில் ஓட்டுநர் , கோபப்படும் வாகன ஓட்டுநர் என சிலருக்கு வனத்துறை எச்சரிக்கை செய்ய வேண்டும்.

இக்கதை எனது பயண அனுபவமே ..!

எதையும் எதிர்பார்க்காமல், சுற்றுலா என்ற நோக்கோடு, ஓரிரு நாட்கள், குறைந்த செலவில், காட்டிற்குள் தங்கி, இயற்கையை அதன் இடத்தில் சென்று ரசிக்க விரும்பினால், தென்மலை அதற்குச் சிறந்த இடம்..!

Photo of Monsoon Trip to Thenmala, Kerala.(in Tamil) 18/18 by Sivalingam P

பருவமழை முடியும் காலத்தில் சென்று வாருங்கள் தேன்மலைக்கு..!

என்றும் அன்புடன்

ப . சிவலிங்கம்

---------------------------------------------------------

தோராய செலவு : ரூ 5000 (இருவருக்கு)

1. ரயில் (சென்னை - தென்மலை)- ரூ 920

2. தங்கும் விடுதி -ரூ 840

3. சாப்பாடு - ரூ 1000

4. உள்ளூர் போக்குவரத்து- ரூ 300

5. தென்மலை சுற்றுலா கட்டணம் -ரூ 970

6. ரயில் ( தென்மலை-சென்னை)- ரூ 920

மேலும் தகவலுக்கு கீழே உள்ள இணையதளங்களைப் பார்க்கவும்

1. www.thenmalaecotourism.com

2. www.forest.kerala.gov.in/index.php/kollam/shendurney-eco-tourism